_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, September 11, 2008

பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி

பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி நன்றி தினமலர்

முந்தய பதிவுஅதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி. இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்
ஜெனிவா: உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (பெரிய வெடிப்பு) இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.

பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "ஹிக்ஸ் பாசன்' எனும் துகளை விஞ்ஞானிகள் "கடவுள் துகள்' என்று அழைக்கின்றனர்.

முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின் இது பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. தற்போது மீண்டும் செயற்கையாக "பிக்-பேங்' நடத்துவதன் மூலம் அந்த "கடவுள் துகளை' கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். நேற்று துவங்கிய இந்த பரிசோதனை முடிவை உடனே தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது பிரபஞ்சம் தோன்றியது குறித்து இதுவரை பதில் கிடைக்காத சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் .

கடந்த 30 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், கடந்த 2003ம் ஆண்டு கட்டுமானப் பணியைத் துவங்கினர். உலகம் முழுவதிலும் இருந்து ஒன்பதாயிரம் இயற்பியல் விஞ் ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சோதனைக்காக சுவிட்சர் லாந்து - பிரான்ஸ் எல்லை அருகே "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (மிகப்பெரிய ஹாட்ரான் துகள் மோதல் கருவி) எனும் பெரிய கருவியை ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தை(செர்ன்) சேர்ந்த விஞ்ஞானிகள் லின் இவான்ஸ் என்பவர் தலைமையில் நிர்மாணித்தனர்.

இதற்கான செலவு 900 கோடி டாலர். வட்ட வடிவமான 27 கி.மீ., நீளம் கொண்ட சுரங்கம் போன்ற பாதையுடன் கூடியது. இந்த சுரங்க வளையத்துக்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான் கற்றைகளை பெரிய வெடிப்புக்காகச் செலுத்தினர். இந்திய நேரப்படி, மதியம் 1 மணி 5 நிமிடத்துக்கு பரிசோதனை துவங்கியது. 1 மணி 56 நிமிடங்களுக்கு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான புள்ளிகள் "செர்ன்' மைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது. இதனால் உற்சாகம் அடைந்த விஞ்ஞானிகள், "ஷாம்ப் பெய்ன்' பாட்டில்களைத் திறந்து வெற்றியைக் கொண்டாடினர்.

தற்போது, இடமிருந்து வலமாக துகள்கள் சுரங்க வளையத்துக்குள் வினாடிக்கு 11 ஆயிரம் தடவை சென்று வரும்படி புரோட்டான் துகள் கற்றைகளை அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வலமிருந்து இடமாக துகள்களை அனுப்பும் போது தான், அந்த "பெரிய வெடிப்பு' நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது கோடிக்கணக்கில் வோல்ட் மின்சார சக்தி வெப்பம் உருவாகி, அதில் கிடைக்கும் துகள் தான் இத்தனை நாள் காத்திருக்கும் கேள்விக்குத் தகவல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பிரபஞ்சம் உருவான பெரிய வெடிப்புக் கோளம் ஒரு குறுகிய நேரத்துக்கு உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வீதி, கிரகங்கள் என நாம் அறிந்தவை வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ளவற்றில் 73 சதவீதம் "அறியப்படாத சக்தியாகவும்' (டார்க் எனர்ஜி), 23 சதவீதம் அறியப் படாத பருப்பொருளாகவும் (டார்க் மேட்டர்) உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இது போன்ற மர்மங்கள் விலகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். "பிக்-பேங்' நிகழ்ந்தவுடன் அடுத்த கணத்தில் என்ன நடந்தது? புரோட்டான்கள் அழிந்து "உயிர்க் குழம்பு' எவ்வாறு உருவானது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண உள்ளனர்.

விஞ்ஞானிகள் எதிர்ப்பு: இந்த ஆய்வு காரணமாக உலகமே கூட அழிந்து போகலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு செயற்கை மோதல்களை நிகழ்த்துவதால், 'பிளாக் ஹோல்' எனும் கருந்துகள் உருவாகி பூமி உட்பட கிரகங்கள், சூரியன் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் என்றனர். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆய்வுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைக் கண்டறிய நடந்த முயற்சியில் வெற்றி பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

பயம் வேண்டாம்: "பிக் -பேங்' பற்றிய பயம் தேவையற் றது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்த செர்ன் தளத்துக்கு தானே சென்றுள்ளதாகக் கூறிய கலாம், "இந்த ஆய்வால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது போன்ற பரிசோதனைகள் அவசியம்' என்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உட்பட உலகின் முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை ஆதரித்துள்ளனர். இந்த புரோட்டான் துகள் கதிர்கள் அதிக திறனுடன் இருக்கும் போது, அதன் மீதான கட்டுப்பாட்டை விஞ்ஞானிகள் இழப்பதால் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு ஏற்பட முடியும். ஆனால், அப்போதும் அந்த கருவிக் கும், சுரங்கப் பாதைக்கும், சுற்றியுள்ள பாறைகளுக்கும் மட்டுமே பாதிப்பு ஏற்படும். உலகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந் தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக் கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல் களை முழுமை யாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பெருமை: உலகை அதிரச்செய்த இச்சோதனை நடந்த "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (எல்.எச்.சி.,) கருவியை உருவாக்குவதில் இந்தியா சார்பிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. இதன் கட்டமைப்பில் இந்தூரில் உள்ள "ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி' பங்களித்துள்ளது. "மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்,' "டிராம்பே பாபா அணுசக்தி ஆய்வுமையம்,' பனாரஸ் இந்து பல்கலை' போன்றவையும் இந்த ஆய்வுப்பணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பிலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பீதி: "பிக்-பேங்' சோதனையால் பேரழிவு ஏற்படலாம் என இந்தியாவின் சில பகுதிகளில் அச்சம் நிலவியது. மேற்குவங்கத்தில் சிலிகுரி நகரில் சூரியனை சுற்றி செயற்கை வட்டம் தெரிந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. இதனால், பலரும் வீட்டுக்குள் பதுங்கிவிட்டதால், சாலைகள் வெறிச்சோடின. சூரிய ஒளி பனிப்படலத்தின் இடையே ஊடுருவுவதால் தான் இத்தகைய வட்டம் உருவானதாக கோல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் துவாரி தெரிவித்தார். "இது வழக்கமான நிகழ்வே, இது குறித்து அச்சமடைய அவசியமில்லை' என்றார். ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள மக்கள் "பிக்-பேங்' நிகழ்வை ஒட்டி கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். "இந்த சோதனையால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என தொடர்ந்து விசாரித்ததாக' கோளரங்க இயக்குனர் சுபந்து பட்நாயக் தெரிவித்தார்.

0 comments: